Friday, August 6, 2010

நாரத்தையா, சாத்துக்குடியா??

தோய்க்கிற கல்லில் தோய்க்கும்போதெல்லாம் இந்த நாரத்தை/சாத்துக்குடி மரத்தில் துணிகள் மாட்டிக்கும். அப்போல்லாம் நினைச்சுப்பேன். அட, இது எத்தனை வருஷம் ஆச்சு? பூக்கவும் இல்லை, காய்க்கவும் இல்லை, கிளையை வெட்டிட்டால் தோய்க்கவானும் கஷ்டம் இல்லாமல் இருக்குமேனு. நேத்திக்கும் அப்படித் தான் நினைச்சுத் தோய்ச்சுட்டு இருந்தேனா, அங்கே ஒரு குயில்குஞ்சு காக்காய் கிட்டே தப்பிச்சுண்டு வந்து ஒளிஞ்சுண்டது. நிமிர்ந்து பார்த்தால் அந்தக் கிளையில் இரண்டு காய்கள் மாதிரி தெரிஞ்சது. நல்லாப் பார்க்கலாம்னு பார்த்தால் ஆஹா, நிஜமே தான், சந்தோஷம் பிடிபடவில்லை எனக்கு. குயிலோடு சேர்த்து இதையும் படம் பிடிக்கலாம்னு காமிராவை எடுத்துண்டு வரதுக்குள்ளே குயில் ஓடியே போயிருக்கு. காமிராவை வைச்சு ஜூம் பண்ணித் தான் எடுத்தேன். ஆனால் சரியா விழலை. வெயில் வேறே! வலப்பக்கமாப் பாருங்க பெரிய இரண்டு இலைக்குப் பின்னாடி இரண்டே இரண்டு காய்கள் தெரியும்.
இந்த இடத்தில் முன்னாலே பதினைந்து வருஷம் முன்னாடி ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அம்பத்தூரிலேயே ராம்நகர்னு ஒரு ஏரியாவில் குடி இருந்தப்போ தானாய் வந்தது. அங்கே இருந்து கொண்டு வந்து சில காலம் குடி இருந்த வீட்டில் வளர்ந்துட்டு அப்புறமாய்ச் சொந்த வீட்டில் அதே எலுமிச்சைக் கன்னை வைச்சோம். அதுவும் பூத்துக் காய்க்கவில்லை. அப்புறமா என்னோட அம்மா அந்த மரத்துக்குச் சந்திர கிரஹணத்தும்போது புட்டுப் போட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டாங்க. அதற்குச் சிலகாலத்துக்கு அப்புறமா எலுமிச்சை பூத்துக் காய்ச்சுச் சக்கைப் போடு போட்டது. ஒரு எலுமிச்சை சின்ன ஆரஞ்சி சைஸ் இருக்கும். அதுக்கப்புறம் ஒரு புயலில் கிளை ஒண்ணு முறிஞ்சு போகத் தெரியாத்தனமா அதை வெட்டிட்டோம். எலுமிச்சைக்கு இப்படிக் கிளையை எல்லாம் வெட்டினாச் சுத்தமாப் பிடிக்காது. ஆகவே அது அப்படியே உயிரை விட்டுவிட்டது. அதே இடத்தில் கொஞ்சம் தள்ளி இந்த மரம் வந்தது. இதுவும் பூத்துக் காய்க்காமல் இருக்கச் சென்ற வருஷச் சந்திர கிரஹணத்தின் போது நானும் புட்டு செய்து நிவேதனம் பண்ணினேன்.

இப்போப் பூத்துக் காய்ச்சிருக்கு. மனசெல்லாம் சந்தோஷம். நேத்தே இதைப் பகிர்ந்துக்கணும்னு நினைச்சால் கூகிள் தடை போட்டுப் பழிவாங்கவே அதிலே நேரம் போயிட்டது.

வழிமுறை: சந்திர கிரஹணத்தின் போது இரவில் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறு பெண்களை விட்டு மரத்தின் வேரில் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அதன் பின்னர் புட்டு செய்து மரத்துக்குப் படைத்து நிவேதனம் செய்வார்கள். இப்படிச் செய்தால் காய்க்காத மரம் பூத்துக் காய்க்கும் என்பது நம்பிக்கை.