Thursday, August 15, 2013

ட்ரியோ, ட்ரியோ, ட்ரியோ, ட்ரியோ!வைரவன் பட்டிக்கு நாங்க போனப்போ அப்போத் தான் ரேக்ளா பந்தயம் நடந்து முடிஞ்சிருந்திருக்கு.  முன்னாலேயே தெரியாமப் போச்சேனு வருத்தமா இருந்தது.  ரொம்ப வருஷம் ஆச்சு ரேக்ளா பந்தயம் பார்த்தே! :( சரி போனாப் போகுதுனு மாடுகளையும் அங்கே வைரவருக்காகக் காத்திருந்த ரதத்தையும் படம் எடுத்துக் கொண்டேன்.  கோயிலுக்குள்ளே எடுக்கக் கூடாது. மேலே உள்ள மாடுகளை அதன் சொந்தக்காரர் அர்ச்சகரிடம் விபூதி, குங்குமம் போடுவதற்காக அழைத்து வந்துவிட்டுத் திரும்பக் கூட்டிச் செல்கிறார்.வைரவருக்குக் காத்திருக்கும் ரதம்.  

ரேக்ளாவில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகளும், ரேக்ளா வண்டியும்.  எல்லாத்தையும் மினி லாரியில் ஏத்திட்டாங்க. இதுவும் ஏத்தப்போகும் சமயம் அவசரமாக எடுத்தேன். :)மாடுகளின் சொந்தக்காரர்கள் பெயர் அறிவிக்கப் பட்டதும் மாடுகளோடு போய்ப் பரிசு வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.  இன்னொருத்தர் பரிசு வாங்கச் செல்கிறார்.

Monday, August 5, 2013

வியாபாரம் சூடு பிடிக்குது வாங்க!

ஆடிப் பெருக்குக்குப் போடப் பட்டிருந்த இன்னும் சில கடைகள்.

துணிக்கடைகள்! :)))))

Saturday, August 3, 2013

பை, பை, பை, பை, பைகள் பற்றிய கதை தொடர்ச்சி இங்கே


இது ரொம்பப் பிடிச்சு வாங்கிண்டேன். ஓரிரு முறைதான் எடுத்துப்போனேன். கல்யாணம் ஆகும்போது கைப்பை எல்லாம் கிடையாது. என்னோட சித்தி ஒரு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார்.  அதைத் தான் வைச்சிருந்தேன். கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைக்கையில் குடித்தன சாமான்கள் வாங்க ரங்கநாதன் தெரு ரத்னா ஸ்டோர்ஸ் போனோம். அங்கிருந்து திரும்பும் வழியில் ஒரு கடையில் விதவிதமான பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.  அதில் ஒரு பை என்னைக் கவர்ந்தது.  கூட வந்த அம்மாவிடம் சொல்ல, அம்மா வா, வாங்கித் தரேன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தந்தார். பதினைந்து ரூபாய் சொன்ன பையை எட்டு ரூபாய்னு பேரம் பேசி வாங்கினோம். பை சதுரமாக இருக்கும் என்பதோடு பக்கவாட்டில் குடை வைக்கவும் ஒரு சின்னப் பை இணைத்திருந்தது.  ஆகவே ரொம்பப் பிடிச்சிருந்தது.  வாங்கிட்டேன். அப்போ என்னோட சித்தியும், என் கணவரும், மாமியாரும் வேறே ஏதோ வாங்கிட்டிருந்தாங்க. அவங்களைக் கேட்காமல் இந்தப் பையை வாங்கினேன்னதும் என் கணவருக்கும், சித்திக்கும் கோபம்.  பை நல்லாவே இல்லைனு சொல்ல எனக்கு இன்னமும் அதிகம் பிடிச்சது.  அது  வந்த சில நாட்களிலேயே தினம் தினம்  வெளியே எடுத்துப் போகும்படியாக எனக்கு வேலையும் கிடைச்சது.  அதிலேயே டிபன் டப்பாவையும் போட்டுக்கலாம். தாங்கும். திரும்பி வீட்டுக்கு வரச்சே கிடைக்கும் நல்ல காய்களையும் வாங்கி அந்தப் பையில் போட்டுக் கொண்டு வருவேன். நல்ல உழைப்பு அந்தப் பைக்கு. 

பர்ஸ் போன்ற இந்தப் பை துணியால் ஆனது.  சாடின் துணி. அநேகமாக இந்த நிறத்திலேயே கிடைக்குதுனு நினைக்கிறேன்.  வேறே நிறத்தில் பார்க்கலை.  ஒரு கல்யாணத்தில் வைச்சுக் கொடுத்தாங்க. இதே போல் இரண்டு இருந்தது.  ஒன்றை மாமியாரிடம் கொடுத்தேன். இன்னொன்று என்னிடம் இருக்கு. உள்ளே நிறைய அறைகள்.  மொத்தம் ஏழு அறைகள்.

எங்க பையர் வாங்கிக் கொடுத்த பாக்பேக். மடிக்கணினியை வைத்து எடுத்துவர வேண்டி இதை வாங்கினார்.  நான் சதுரமான பையாகக் கேட்டேன்.  பையர் இதைத் தோளில் மாட்டிக்கலாம்.  உன்னால் தூக்க முடியலைனால் அப்பா தூக்கலாம்.  கையில் எடுத்துப் போகும் பை கை வலிக்கும், வேண்டாம்னு சொல்லிட்டார். 

மஞ்சள் பை மாதிரித் தெரிந்தாலும் இது அந்தக் காலத்தின் மஞ்சள்பை அல்ல.  இப்போது தராங்களே ஒரு துணிப்பை கல்யாணங்களிலே அப்படிப் பட்டது.  முன்பெல்லாம் துணிக்கடைகளிலும் சரி, சாமான்கள் வாங்கினாலும் சரி துணிப்பையே கொடுப்பாங்க.  பெரும்பாலும் மஞ்சள் பையாகவே இருக்கும். அந்த மஞ்சள் பை பலருக்கும் ஒரு அடையாளமாகவும் இருந்தது. அதிலேயே பணத்தைக் கட்டுக்கட்டாகப் போட்டு எடுத்துவராப் போல எல்லாம் தொடர்களில் காட்டறாங்க. ஏன் கொள்ளை அடிக்கமாட்டாங்கனு நினைச்சுப்பேன்.


அதே மாதிரிப் பை தான்.  ஆனால் கொஞ்சம் பழுப்புக் கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு எழுத்துக்களோடு கூடியது.  இதுவும் கல்யாணப் பைதான். இப்படியாகப் பைகளின் புராணம் நிறைவு பெற்றது.  இன்னமும் பல பைகள் இருக்கின்றன.  சுருக்குப் பைகளும் அவற்றில் ஒன்று. சில சுருக்குப் பைகளும் இருக்கின்றன.  அதில் ஒருத்தர் ஒரு கல்யாணத்தில் வெல்வெட்டில் சுருக்குப் பை ஒன்று கொடுக்க பொண்ணு அதை எடுத்துட்டுப் போயிட்டா! :))))