Monday, July 26, 2010

அழகான அரசலாறு அலங்கோலக் காட்சியில்!

 என்னடா பசுமையா இருக்கேன்னு பார்க்கறீங்களா? பூமித்தாய் தன்னை ஒட்ட ஒட்டச் சுரண்டியும் இன்னும் தன்னிடம் இருக்கிறதை எல்லாம் இதோ இருக்கு எடுத்துக்கோ, எடுத்துக்கோனு ஆசையாக் கொடுத்துட்டுத் தான் இருக்கா. நாம தான் அதைப் புரிஞ்சுக்காமல் அவளை மேலும் மேலும் உறிஞ்சிக்கொண்டு இருக்கோம். இது கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி வழியாகப்பூந்தோட்டம் செல்லும் பாதையில் உங்க கூடவே வரும் அரசலாறு. கன்னிமாடத்தில் கொண்டு விடப் பட்ட அழகான இளவரசியைப் போல் நளினமாகவும், அழகாகவும், மென்மையாகவும், ஆரவாரமின்றியும் ஓடிக்கொண்டிருந்தாள் ஒரு காலத்தில். மழைக்காலங்களில் காவேரியில் பூரணப் பிரவாகம் எடுக்கும்போது கூட இவள் எந்தவித ஆவேசமும் இன்றி அமைதியாகப் பயணிப்பாள். இன்றைக்கு இவளிடம் மிச்சமிருக்கும் அழகு இதுதான்.
 
Posted by Picasa
கயவர்களிடம் அகப்பட்டுச் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணைப் போல் இந்த அரசலாறும் மக்களால் பலவிதங்களிலும் சீரழிக்கப் பட்டு மண்மேடுதட்டி, ஆங்காங்கே பார்த்தீனியமும், ஆகாயத் தாமரைகளும் படர்ந்து செழிப்பாக வளர்ந்து நிற்க, பயந்து, பயந்து எங்கேயோ ஒரு ஓரத்தில் ஓடுகிறாள். பொல்லாத கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட பெண், கூடத்தில் இருக்கும் கோபக்காரக் கணவனை சமையலறையில் இருந்து எட்டிப் பார்ப்பதைப்போல் என்னிடமும் இன்னும் கொஞ்சமானும் ஈரம் இருக்குனு காட்டும் வகையில் ஓடுகிறாள். கண்ணிலே ரத்தம் வருது ஒவ்வொரு முறை பார்க்கும்போதும். என்ன கொடுமை இது?
 
Posted by Picasa
ஒரு காலத்தில் இவள் மேல் கட்டப்பட்ட மூங்கில் பாலத்தில் கவனமாக அடியெடுத்து வைத்து நடக்கவே உள்ளூர ஆசையாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கும். மழைக்காலத்தில் மாட்டு வண்டிகளை நதியில் இறக்கிவிட்டுட்டு, வண்டியை அவிழ்த்துவிட்டு, மாடுகளைத் தண்ணீரில் ஓட்டி, அக்கரைக்குச் செலுத்துவார்கள் என் மாமனாரும், என் கணவருமாக. நானும், குழந்தைகளுமாக மூங்கில் பாலத்தில் நடந்து அக்கரைக்குச் செல்வோம். ஆங்காங்கே குடி இருக்கும் வீடுகளில் இருக்கும் பண்ணையாட்கள் உடனே ஓடி வந்து வண்டியை மெதுவாக இழுத்துப் போய் அக்கரையில் கரை ஏறி இருக்கும் மாடுகளைப் பூட்டி வண்டியைத் தயார் செய்வார்கள். இப்போ மூங்கில் பாலமே இல்லை. கல்பாலம் வந்தாச்சு, பேருந்துகள் ஓடுகின்றன. சிற்றுந்துகள் எனப்படும் மினி பஸ்களும் ஓடுகின்றன. கிராமங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இவை எல்லாம் தேவைதான். ஆனால் நதியில் உள்ள தண்ணீர் எங்கே போச்சு? சரி அதுதான் இல்லை, போகட்டும், மழைக்காலத்தில் ஓடி வரும் தண்ணீரையாவது சேமிக்கும்படியாக பார்த்தீனியச் செடிகளும், ஆகாயத் தாமரைக்கொடிகளும் அகற்றப்பட்டு மேடுகள் கரைக்கப் பட்டுத் தூர் வாரி இருக்கின்றனரா? அதுவும் இல்லை. வரும் கொஞ்ச நஞ்சத் தண்ணீரும் கடலுக்குள் சென்றுவிடும். கிடைக்கும் தண்ணீரைப் பத்திரமாகப் பாதுகாக்க முடியாமல் அடுத்தவங்களைக் குறை சொல்லி என்ன பயன்?

வேலைக்கு உணவு திட்டத்தில் வேலை வாங்கிட்டு உணவும், பணமும் கொடுக்கிறதாய்ச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ இந்த வேலையும் ஒரு வேலைதான் என்று கணக்கிலேயே எடுத்துக்கமாட்டாங்களா? இது முக்கியமில்லையா? எனக்குத் தெரிஞ்சு ஆற்றில் தண்ணீர் ஓடிப் பார்த்திருக்கேன் என்றால் இப்போக் கடந்த முப்பது வருடங்களாக இப்படி வறண்ட ஆற்றையே பார்க்கிறேன். இது என்ன நியாயம்? இது என்ன அலட்சியம்? ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் இதை எல்லாம் பார்க்கப் பார்க்க மனசும், உடம்பும் கொதிக்கிறது தான் மிச்சம். இதிலே விவசாய நிலங்களை எல்லாம் வீடுகள் கட்டவேண்டி ஒதுக்கிட்டும் வராங்க. விவசாயம் இல்லைன்னா எப்படிச் சாப்பிடப் போறோம்? இது கிராம மக்கள் அவங்களாவே தங்களுக்குள்ளாக செய்து கொள்ளவேண்டிய ஒரு வேலை. அதை எடுத்தாவது சொல்லலாமே?

1 comment:

  1. இதே அரசலாற்றங்கறையில் ஒரு கல்யாணத்துக்கு 1962 ல போயிருந்தோம். ஆவணிமாதம். பாலிகை கரைக்கிற குட்டிகளா சீக்கிரம் மேல ஏறுங்கோ வெள்ளம் வருதுன்னு ஒரு சத்தம். சிட்டாக மேல ஏற,பட்டுப் பாவாடை தடுத்தது. தட்டுத் தடுமாறி மேலே வரும்போது வந்ததே சிவப்பு வெள்ளம்.:) மறக்கவே மாட்டேன். வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் கீதா. தண்ணீருக்கு இழைத்த அநீதி இன்னும் எத்தனை நாள் தொடருமோ:(

    ReplyDelete