Tuesday, September 27, 2011

கருவிலிக்கு வாங்க!

 
Posted by Picasa
மண்டலாபிஷேஹத்துக்குப் பரவாக்கரை போயிருந்தப்போ பக்கத்து ஊரான கருவிலி கோயிலுக்குக் காலை நேரம் போய்விட்டோம். நிழல்கள் நீள நீளமாய் விழ அழகு கொஞ்சியது. நான் கல்யாணம் ஆகி வந்தப்போ இந்தக் கோயில் இப்படி இருக்காது. இந்த ராஜ கோபுரம் எல்லாம் இல்லை. உள்ளே சந்நிதியை மட்டும் பூட்டறாப்போல் இருக்கும். கோயில் இடிஞ்சும், ஆங்காங்கே கற்கள் பெயர்ந்தும் காணப்படும். கோயில் கிணற்றில் தண்ணீர் நன்றாக இருக்கும் என்பதால் குடிநீருக்கு மாலை வேளையில் என்னோட நாத்தனாரோட வருவேன். குருக்கள் மட்டும் சாயரட்சை பண்ணுவார். கொஞ்சம் பயம்மாக்கூட இருக்கும். அதன் பின்னரும் பல காலம் அப்படியே தான் இருந்தது.
 
Posted by Picasa
அப்பப்போ நினைச்சுப்போம்; ஏதானும் அற்புதம் நிகழ்ந்து இந்தக் கோயிலுக்கு ஒரு விடிவு பிறக்காதானு. இத்தனைக்கும் தேவாரத் திருத்தலம். இந்தக் கோயிலின் மேல் அப்பர் பாடல் ஒன்று உள்ளது. எனக்கு இங்கே தான் கல்யாணம் ஆகப் போகிறதுனு முடிவானதுமே என்னோட அப்பா இந்தக் கோயில் தேவாரத் தலம் என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார். அதே போல் மதுரை ஆயிரக்கால் மண்டபத்திலும் தேவாரத் திருத்தலங்கள் என்னும் வரைபடத்தில் இந்த ஊரின் பெயர் காணலாம்.

கருவிலிக்கொட்டிட்டை என்ற பெயரில் காணமுடியும். அப்பர் திருக்குறுந்தொகைப் பதிகத்தில் முதல் இரண்டு பதிகம் கீழே காணலாம்.

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5.69.1
692

ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

சுவாமி பெயர் சற்குணேஸ்வரர், அம்மன் பெயர் சர்வாங்க சுந்தரி. அம்மன் உயரம் ஐந்தரை அடி உயரம். நேரே நின்று நம்மோடு பேசுவாள். ஒன்பது கஜம் புடைவை உடுத்தினால் நம்மோடு நெருங்கியவர் யாரோ நேரில் நின்று பேசுகிறாப்போல் இருக்கும். இந்தக் கோயிலுக்கும் திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. கல்கி சேர்மனாக இருந்த திரு வைத்தியநாதன் அவர்களின் சகோதரர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாருதி உத்யோக் சேர்மன். அவர் இந்த ஊர்க்காரர் தான். அவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன்பிறந்த சகோதரிகள். அக்கா கருவிலியிலும், தங்கை பரவாக்கரையிலும் வாழ்க்கைப் பட்டிருக்கின்றனர். இங்கே அக்கா கணவர் சிவன் கோயில் ட்ரஸ்டியாக குழந்தை ஐயர் என்ற பெயரில் இருந்திருக்கிறார். பரவாக்கரையில் தங்கை கணவர் சாம்பசிவம் பெருமாள் கோயில் ட்ரஸ்டியாக இருந்துள்ளார்.

குடும்பம் ஊரை விட்டே செல்ல கோயில் கவனிப்பாரின்றி இருந்தது. திரு கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் டெல்லியிலேயே பல வருடங்கள் வாசம். ஊர் நினைப்பே இல்லாமல் இருந்தவருக்குத் திடீரெனக் கனவில் வந்து இறைவன் என்னைக் கவனிக்கவில்லையே எனக் கேட்க, அவர் தன் மூலங்களை ஆராய்ந்து கொண்டு கண்டுபிடித்துக் கருவிலிக்கு வந்து முதன் முதல் அங்கே இருந்த அனுமன் கோயிலைச் செப்பனிட்டார். பின்னர் பெரும் முயற்சி எடுத்து சிவன் கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். முதல் முறையாகப் பல வருடங்கள் கழித்துக் கும்பாபிஷேஹம் தொண்ணூறுகளின் கடைசியில் நடைபெற்றது. அதன் பின்னர் நாங்கள் ஊர்க்காரர்கள், மற்றும் தெரிந்தவர், அறிந்தவர் அனைவரும் வைப்புத் தொகையில் நிதியைச் சேர்த்து முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் தினசரி கைங்கரியம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது ஆறுகால வழிபாட்டோடு, சமீபத்தில் நான்கு ஆண்டுகள் முன்பு ராஜ கோபுரம் கட்டப்பட்டுக் கோயிலில் நடராஜர் சிலை புதியதாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

கோயிலின் ஒரிஜினல் நடராஜர் பாலூர் நடராஜரோடு சேர்ந்து வெளிநாடு போய்விட்டார்.

 
Posted by Picasa
கோயிலின் வெளிப்பிரஹாரத்துச் சுவரில் இவர் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன உருவமாய்க் காணப்படுவார். இவர் மேல் என் கணவருக்கு அடங்காக் காதல். கருவிலியில் இருந்தவரை தினமும் இவருக்கு விளக்கேற்றி இவரின் தலைமேல் கல்லில் ஓர் ஓட்டை இருந்தது முன்னர், இப்போக் காணோம்; அதில் செம்பருத்திப் பூவை வைத்து வழிபட்டுவிட்டுப் பள்ளிக்குச் செல்வாராம். பள்ளிக்குச் செல்லக் கோயிலின் பின்னால் இருக்கும் வயல்கள் வழியே தான் செல்ல வேண்டும்.

2 comments:

  1. உங்கள் கோவிலுக்கு ஆறு கால பூஜை செய்ய வசதி ஏற்பட்டது போல மற்ற ஊர்களிலும் அந்தந்த ஊர்க்காரர்கள் சேர்ந்து தங்கள் கோவிலுக்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வூர் நல்லதொரு உதாரணம். அருமையான பதிவு.

    ReplyDelete
  2. பரவாக்கரைப் பெருமாள் கோயில் குறித்த சுட்டியை இன்றைக்குள் கொடுக்கிறேன். மறந்து போகிறது.

    ReplyDelete