Monday, April 27, 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

கும்பகோணத்திலே இருந்து தஞ்சாவூர் போய், அங்கே இருந்து மதுரை அழகர் கோயில் போகும் வழியில் கண்ட வயல்வெளிகள்.
அழகர் கோயில் செல்லும் பாதையில் எடுத்த படம் இது. வழியெல்லாம் என்ன குளுமை, என்ன குளுமை, கண்ணுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும், உடலுக்கும் குளுமைதான்.

Friday, April 24, 2009

திருச்செந்தூரில் !

திருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.

ஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்

இது ஹூஸ்டன் கால்வெஸ்டனில் எடுத்தது. கடலும் சரி, கடற்கரையும் சரி, எனக்கு என்னமோ இந்தியா தான் அழகுனு தோணுது. யு.எஸ்ஸில் மற்றக் கடற்கரைகளைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தானே. அந்த அழகே தனி. அடுத்த போஸ்டில் பாருங்க திருச்செந்தூர்க் கடலும், கடற்கரையையும்.

Tuesday, April 21, 2009

இரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது!

ஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல! என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும்?? கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.

Saturday, April 11, 2009

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு!

மதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.

ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
கொம்பானை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம்
பார்க்க வாங்கோ!" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது!

Sunday, March 1, 2009

பெருமாளே! உனக்கு இந்த கதியா? :((((((

என் மாமனார் காலம் வரையில் எங்கள் குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலின் வெளிப் பிரகாரம் நீங்கள் காண்பது. இந்தக் கோயிலின் இந்தக் கருங்கல் சுவர்கள் இங்கே இருந்த மற்றொரு மாடக் கோயில் ஆன லிங்கத்தடி சிவன் கோயிலின் இடிந்த மிச்சங்கள் என இந்தக் கற்களால் ஆன கல்வெட்டுகள் கூறுவதாய்ச் சொல்கின்றனர். இது பற்றித் தொல்பொருள் ஆய்வாளர்கள் தான் ஆய்வு செய்யவேண்டும். வலை உலக நண்பர் திரு ப்ளாஸ்டிக் சந்திரா மூலம் திரு சத்திய மூர்த்தி சென்று பார்த்து இதை உறுதி செய்திருக்கின்றார். எனினும் கல்வெட்டுகள் படிக்கப் படவேண்டும்.
கோயிலின் இன்றைய நிலையை இது சுட்டிக் காட்டுகின்றது. பெருமாளுக்கு அரை வேலிக்கு மேல் நிலம் உள்ளது. கருகமரத் தோப்பு உண்டு. ஆனால் பெருமாளுக்குத் தினப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகின்றார். விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல், பசிக்குச் சோறு இல்லாமல், மாற்றுத் துணி இல்லாமல், அபிஷேக ஆராதனைகள் இல்லாமல் பெருமாள் படும் கஷ்டம் தாங்க முடியவில்லை.
கோயிலின் பிரதான வாயிலின் நிலைமை. இன்னும் மழைக்காலத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் மாட்டுத் தொழுவமாகவும் பயன்பட்டு வருகின்றது.
பிரகாரத்தின் மற்றொரு பக்கம்.
இந்தக் கோயிலைப் புனருத்தாரணம் செய்ய ஆகாயத்தில் இருந்து கங்கையைக் கொண்டு வந்த அந்த பகீரதனைப் போலவே முயன்று கொண்டிருக்கின்றோம். முயற்சி வெற்றி பெற அந்தப் பரந்தாமன் தான் அருளவேண்டும். உலகையே காக்கும் அவனுக்குத் தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாதென்பதில்லை. மனிதர் இன்னும் எவ்வளவு கீழே இறங்க முடியும் என்று எடுத்துக் காட்டுகின்றான்.பிரதான வாயிலின் மற்றொரு தோற்றம். மூலவரின் தோற்றம். பொதுவாய் மூலவரைப் படம் பிடிப்பதில்லை. ஆனால் இங்கோ பெருமாள் தனக்கு வீடு மழைக்கு ஒழுகாமல், வெயிலுக்குக் காயாமல், தினம் ஒருவேளை சோறாவது வேண்டும் என்ற வேண்டுதலோடு நிற்கின்றார். பிச்சை எடுக்கும் நபர் நேரில் வந்தால் தானே கிடைக்கும்? ஆளை அனுப்ப முடியுமா? அனைவரின் உதவியினாலும், பிரார்த்தனையாலும் இவருக்கு ஒரு வழி பிறக்கவேண்டும். இப்போதைக்கு எங்களால் முடிந்தவரையில் தினமும் ஒருவேளை விளக்கேற்றி, நிவேதனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றோம். என்றாலும் வந்து வழிபாடு நடத்துபவர் ஒண்ணும் சந்நியாசி அல்ல. ஆகையால் கொஞ்சமாவது குத்தகைக்காரங்க மனசும் வைக்கணுமே? இப்போதைய அறங்காவலர் சரியாக அறத்தைக் காக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

Saturday, January 3, 2009

பாதை தெரியுது பார்!!!

கிராமத்துக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பாதை! கும்பாபிஷேகத்துக்காக கட்டிடவேலை நடந்துட்டு இருந்தது. சாமான்கள் இருந்தன. வேலை செய்யறதையும் சேர்த்து எடுக்க முயன்ற போது ஆட்களைக் காணவில்லை. செங்கற்களை மட்டுமே எடுத்தது.கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தயாராயிட்டு இருக்கும்போது எடுத்த படம் இது! கும்பாபிஷேகம் 2008 ஜூன் மாசம் முடிஞ்சாச்சு. போய் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்து கும்பாபிஷேகத்திலே கலந்து கொண்டும் வந்தாச்சு. அது தனி அனுபவம்.