Wednesday, May 13, 2009

வானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்!

2007-ல் டிசம்பரில் அழகர் கோயில் போனப்போ அங்கே எடுத்தது இந்தப் படம். வானரக் கூட்டமே இருந்தது. எல்லாம் ஓடிப் போக இருந்தவை மட்டுமே கொடுத்த போஸ் இது!கீழே பாதையில் ஒரு வானரம் வந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டு சாலையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருந்ததுனு நினைக்கிறேன். கீழே ரயில் பாதை இருக்கும் படம் பழநி மலை மேல் செல்லும் ரயில் ஏறும் இடம். நாங்க போனப்போ விஞ்ச் இல்லை. ஆகவே மலைக்கு மேலே ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில் தான் செல்ல முடிந்தது. நடந்து போகத் தான் ஆசை. ஆனால் இரவுக்குள் எங்க அப்பாவின் ஊரான மேல்மங்கலம் போய்ச் சேரணும். ஆகையால் ரயிலில் சீக்கிரம் போகலாமேனு சிறப்புக் கட்டணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்தோம். அப்போ ஒரு நபருக்கு 50ரூ சிறப்புக் கட்டணம் ரயிலுக்கு. என்றாலும் ரயில் வருவதற்குப் பல மணி நேரங்கள் காத்துட்டு இருக்க வேண்டி இருக்கு. சிறப்புக் கட்டணம்னு வசூலிக்கிறாங்க. ஆனால் ரயில் பயணம் சிறப்பும் சரி, சாமானியக் கட்டணமும் சரி சேர்ந்து தான் பயணம் போக வேண்டி இருக்கு. சும்மா ஒரு பண வசூல் அரசாங்கத்துக்கு. கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுபட்டால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை!
அதே நாள் நாங்கள் மேலே செல்லும்போது (2007 டிசம்பரில்) பழநியில் எடுத்தது இந்தப் படம். மலை மேல் செல்லும் ரயிலில் உட்கார்ந்து செல்லும்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் இது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழநியிலே தான் சேருதுனு சொல்லுவாங்க இல்லையா? அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம்! படம் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டித் தான் இருக்கு. கதவுகளை நன்றாய் மூடிடறாங்க. ஜன்னல் வழியே தெரியும் காட்சிதான் எடுக்க முடியும். அந்த மலை ரயில் போகும்போது வெளியே நின்னு எடுக்கிறது ரொம்ப ஆபத்தானது. என்றாலும் எடுக்க முடியலையேனு தான் இருக்கு!

Sunday, May 10, 2009

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

ஹூஸ்டனுக்கு அருகே உள்ள கால்வெஸ்டனின் பறவைகள் பூங்காவில் எடுத்த படம் இது. வித விதமான பறவைகள். வித விதமான நிறங்களிலே. நிறங்களின் வண்ணக்கலவை படைத்தவனின் ரசனையைச் சுட்டுகின்றது. என்ன ஆச்சரியம், சிவப்பு நிறப் பெயிண்டால் கூட இவ்வளவு சிவப்பைக் கொண்டுவர முடியாது. கழுத்துக் கிட்டேயும், கால்களிலேயும் பாருங்க, இளஞ்சிவப்பு நிறம், அங்கே என்னமோ தண்ணீரை விட்டுத் துடைச்சு எடுத்தாப்போல நிறம் கொஞ்சம் மங்கிக் காண்கின்றோம். அதுவும் அந்த நிறச் சேர்க்கையில் செய்திருக்கும் அற்புதங்களைக் காணக் கண் போதாது. மீன்களின் நிறச் சேர்க்கை அதிசயிக்க வைத்தது. படங்களைக் காணோம். ஒளிஞ்சுட்டிருக்கு போல. இது தான் எனக்குப் புரியறதில்லை. பிறப்பின் ரகசியத்தைப் போல். நான் தேடறச்சே படமே சரியாக் கிடைக்கிறதில்லை.
ஆனால் என்னைத் தவிர வேறே யாருமே கணினி பக்கம் வரதும் இல்லை. அப்புறமா எங்கே போகும் படங்கள் எல்லாம்? சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா?? ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு???? தேடணும்! :(

Monday, April 27, 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

கும்பகோணத்திலே இருந்து தஞ்சாவூர் போய், அங்கே இருந்து மதுரை அழகர் கோயில் போகும் வழியில் கண்ட வயல்வெளிகள்.
அழகர் கோயில் செல்லும் பாதையில் எடுத்த படம் இது. வழியெல்லாம் என்ன குளுமை, என்ன குளுமை, கண்ணுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும், உடலுக்கும் குளுமைதான்.

Friday, April 24, 2009

திருச்செந்தூரில் !

திருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.

ஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்

இது ஹூஸ்டன் கால்வெஸ்டனில் எடுத்தது. கடலும் சரி, கடற்கரையும் சரி, எனக்கு என்னமோ இந்தியா தான் அழகுனு தோணுது. யு.எஸ்ஸில் மற்றக் கடற்கரைகளைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தானே. அந்த அழகே தனி. அடுத்த போஸ்டில் பாருங்க திருச்செந்தூர்க் கடலும், கடற்கரையையும்.

Tuesday, April 21, 2009

இரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது!

ஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல! என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும்?? கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.

Saturday, April 11, 2009

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு!

மதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.

ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
கொம்பானை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம்
பார்க்க வாங்கோ!" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது!