Saturday, November 21, 2009

எப்போ விடியும்???

மழை விட்டும் தூவானம் விடலை என்பதைப் போல் மழை ஓரளவு குறஞ்சும் எங்க தெருவோட நிலைமை இது. தமிழ்நாட்டில் பல தெருக்களின் நிலைமை இதுதான் என்றாலும் அங்கே எல்லாம் சாலை போட்டும் இப்படி ஆகி இருக்கும். எங்க தெருவிலோ சாலை போடறதுனா என்னனு எங்களுக்கே மறந்துபோச்சு. இந்த அழகிலே பக்கத்து அடுக்குமாடிக்குடியிருப்பிலே அவங்க செப்டிக் டாங்க் தண்ணீரை வேறே இருபத்துநான்கு மணி நேரமும் மழைநீர் வடிகாலுக்குனு தோண்டிய கால்வாயில் விட்டுடறாங்க. துர்நாற்றம் தாங்கலை என்பதோடு கொசுக்களின் இம்சைவேறே. காலம்பர ஐந்து மணிக்கு வாசல் தெளிக்கப் போனால் கொசுக்களின் முற்றுகை, தெருவிளக்கு வேறே லேசாக் காத்தடிச்சாலே எரியாது. அந்த இருட்டு, தண்ணீரிலே குடிவந்த, குடி இருக்கும், குடிவரப் போகும் சுப்புக்குட்டிகள், அவற்றின் உணவான தவளை, பெரிய தவளை பார்த்திருக்கீங்களா? பச்சைநிறத்தில் ஒரு பூனைக்குட்டி சைசுக்கு இருக்கு. அதுவும் வந்துடும். இப்படி சகல ஜீவராசிகளின் துணையோடு தான் வாசல் தெளிப்பு. மர்மக் கதைகளில் வராப்பல திக் திக்னு இருக்கும். இதுக்கு என்னிக்கு விடிவு?

இந்த வாரம் இந்து தினசரிப் பத்திரிகையின் டவுன் டவுன் நியூஸ் பக்கத்தில் எங்க தெருவோட அழகையும், உள்ளாட்சித் துறை அமைச்சர், முதல் அமைச்சர்னு போய் முறையிட்டதையும் நாங்க சொல்லிப் புலம்பி இருக்கிறதைப் போட்டிருக்காங்க. ஏதோ இனியாவது விடிவு கிடைக்காதா என்ற நப்பாசைதான்!

Wednesday, July 29, 2009

சிதம்பரத்தில் தீக்ஷிதர் வழிபடும் நடராஜர்!

சிதம்பரத்திற்குப் போன மாசம் போனப்போ தீக்ஷிதர் வீட்டில் அவர் தினமும் வழிபடும் நடராஜரை அவர் அனுமதியோடு எடுத்த படம் இது. கொஞ்சம் யோசனையாவும், தயக்கமாவுமே இருந்தது எடுக்கலாமா, வேண்டாமானு. அப்புறமா கொஞ்சம் நிதானப் படுத்திட்டு எடுத்துட்டேன். கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கோ??? தெரியலை!

Sunday, July 12, 2009

நந்தி மறைக்குது!

எவ்வளவு பெரிய நந்தி??? நல்லா எடுத்திருக்கேனா?? அப்புறம் தன்னோட போஸ் சரியாவே வரலைனு நந்தி சொல்லும்! படம் எடுக்கிறதுக்குனு படிச்சுட்டு எடுக்கணும்! உள்ளே பிரகதீஸ்வரரை எடுக்க முடியாது, இப்போ. ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னாலே இந்தக் கோயிலில் உள்ளெ போய்ப் பார்த்துட்டு வரதுக்கே பயம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ இருக்கும். இப்போ என்னன்னா, ஒரே கூட்டம்! கூட்டம்!
தஞ்சாவூர்க் கோயிலில் உள்ளே நுழையும் முன்னர் உள்ள நந்தி மண்டபத்தின் முகப்பு இது. கிட்ட வைச்சு எடுத்தும், சரியா விழலை.

Monday, June 8, 2009

எஃபண்ட் பார்க்கிறீங்களா?

பெரிய கோயிலின் நுழைவாயிலில் நம்ம அருமை நண்பர். நம்ம வீட்டுக்குட்டி மழலைத் தலைவியின் மொழியில் எஃபண்ட்! அவங்க ரொம்ப ரசிச்சாங்க இவரை!
இது போன வாரம் எடுத்த தோற்றம். மூலஸ்தான கோபுரத்தின் ஒரு பக்கப் பார்வை!
நுழைவாயிலின் தோற்றம். இது 2005-ல் எடுத்தது. அநேகமாய்த் தஞ்சை செல்லும்போதெல்லாம் பெரிய கோயில் செல்லாமல் வந்ததில்லை, அல்லது பெரிய கோயில் பார்க்கவென்றே தஞ்சை செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

Monday, June 1, 2009

மீனாக்ஷி, எங்க ஊரிலே இருந்து யு.எஸ். போனாள்.

ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்தேன், இந்தப் படங்களை எல்லாம் எங்கே போச்சோன்னு. பார்த்தால் ஒரு மூலையில் கிடக்கு. பொறுக்கிச் சுத்தப் படுத்திப் போட்டிருக்கேன். ஹூஸ்டன் மீனாக்ஷியும், சுந்தரேஸ்வரரும். இந்தப் படம் எடுத்தது முதல் முறையா 2004-ல் யு.எஸ். போனப்போ. மீனாக்ஷி சின்னப் பொண்ணா இருப்பா பாருங்க.
அப்படியே நம்ம வீட்டிலே ஒருத்தரை நேரில் பார்க்கறாப்போல் இருக்காளா மீனாக்ஷி??? 2004-ல் போனப்போ மதுரைக்கார பட்டர் ஒருத்தரே இருந்தார். அதுக்கு அப்புறமா 2007-ல் போனப்போ அவர் இல்லை. தஞ்சை ஜில்லாவில் இருந்து குருக்கள், (சிவாசாரியார்) ஒருத்தரை நியமிச்சிருந்தாங்க. என்ன ஆனாலும் பட்டர் வழிபாட்டுக்கும், இவங்க வழிபாட்டுக்கும் வித்தியாசம் இருக்குமேனு தோணித்து. என்ன செய்யறது. மீனாக்ஷியின் ஏற்பாடு இது. நல்லாவே இருக்கட்டும் எல்லாரும். அவரும் பிழைக்கவேண்டாமா!

Friday, May 29, 2009

மீனே மீனே மீனம்மா!

வெள்ளி மீன்கள். வெளிச்சம் கொடுக்க முடியலை. என்றாலும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான், கவனிக்க, எடுத்தாச்சு. :D
மீனே மீனே மீனம்மா, விழியைத் தொட்டது யாரம்மா, தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா?

Tuesday, May 26, 2009

மல்லிகைப் பூவா? இட்லியா???? பொன்வண்டின் சந்தேகம்!

மெளலி வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை. அதைத் தோட்டத்தில் மாமரத்தடியில் உள்ள கல்லில் வைக்கச் சொன்னேன். மறுநாள் பார்த்தால் ஒரு பொன்வண்டு அதைப் பூவோனு நினைச்சு தேன் கிடைக்குமானு பார்த்துட்டு இருந்தது. உடனே ஒரு க்ளிக் எடுக்கணும்னு நினைச்சால் கிட்டே போகமுடியலை. ஓடிப் போயிடுது. வேறே வழியில்லைனு தள்ளி இருந்து ஜூம் பண்ணினால் பொன்வண்டைத் தவிர மத்தது வருது. என்னத்தைச் செய்ய? உற்றுப் பாருங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகே ஒரு கல்லில் இரண்டு இட்லியும், கொஞ்சம் கறுப்புக் கலந்த நிறத்தோடு ஒரு பூச்சியும் தெரியும். வேறே வழி இல்லை. கிட்டேப் போனால் பறந்து போயிடுது.